சென்னை:
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், பி.ஏ. ரஞ்சித், அதிதி ஆனந்த் தயாரித்திருக்கும் சுனில் சைனானி, பிரமோத் செருவலத், பிரசூன் கார்க், மனிந்த் பேடி தயாரித்திருக்கும் பைசன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இப்படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள், அருவி மதன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் வனத்தி கிராமத்தில் வாழும் விவசாயி பசுபதி தனது மூத்த மகள் ரஜிஷா விஜயன், மகன் துருவ் விக்ரமுடன் வாழ்ந்து வருகிறார். கபடி விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட துருவ் கபடி விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் ஆசைப்படுகிறார். சின்ன வயதில் இருந்து பெரிய கபடி வீரனாக வேண்டும் என்கின்ற வெறியில் படிப்பைகூட பின்னால் வைத்துவிட்டு விளையாட்டை முன்னிறுத்தியே உழைத்து ஓடிக் கொண்டிருக்கும் துருவுக்கு அவனுடைய சொந்த ஊரிலேயே அவனுடைய நெருங்கிய உறவுக்காரரே கபடி ஆடுவதற்கு தடை போடுகிறார். சொந்த ஊரில் இருக்கும் தன் சாதியைச் சார்ந்த கபடி குழுவில் இடம் பிடிக்க முடியாத துருவ்வை அவன் படிக்கும் பள்ளியின் பி.டி.ஆசிரியர் கை கொடுத்து தூக்கிவிட்டு தன்னுடைய பள்ளி டீமில் சேர்த்து விளையாட வைக்கிறார்.
இந்த சூழ் நிலையில் இருவேறு சாதி பிரிவை சேர்ந்த அமீர் மற்றும் லால் இருவருக்கிடையே கடும் மோதல் ஏற்படுகிறது. இதில் ஒரு பிரிவினர் அமீரை தலைவராக பார்க்கிறார்கள். மற்றொரு பிரிவினர் லாலை தலைவராக கொண்டாடுகிறார்கள். சொந்த ஊரில் துருவ் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான். அவரை முன்னேறவே முடியாமல் மேல் ஜாதியினரால் பல தடைக்ககற்கள் போடப்பட்டு பின்னுக்கு தள்ளப்படுகிறார். ஆனால் அதே மேல் ஜாதி தலைவரான லால், துருவ் விளையாட்டு திறமையை பார்த்து தனது கபடி குழுவில் சேர்த்து கொள்கிறார். இந்த சமயத்தில் அந்த ஊரில் இருவேறு சாதி பிரிவை சேர்ந்தவர்களால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது. துருவ் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான். அவரை மேல் ஜாதியினரால் கபடி போட்டிகளில் கலந்துக் கொள்ள விடாமல், பல தடைக்ககற்கள் போடப்பட்டு பின்னுக்கு தள்ளி விடுகிறார்கள்.
இதனையடுத்து பலவித இன்னல்களுக்குப் பிறகு துருவ் தன் திறமையால் தமிழக அளவிலான கபடி போட்டியில் இடம் பிடிக்கிறார். திறமை இருந்தும் இந்திய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் பெயர் பட்டியலில் துருவ் பெயர் இல்லாமல் நீக்கப்படுகிறது. இறுதியில் துருவ் ஆசிய கபடி விளையாட்டு போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடும் வீரனாக இடம் பிடித்தாரா? பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துருவ் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் ’பைசன்’ படத்தின் மீதிக் கதை.
கிட்டானாக நடித்திருக்கும் துருவ் விக்ரம், பள்ளிப் பருவத்திலும், கபடி வீரராக களம் காணும் போதும் தோற்றத்தில் வேறுபாட்டை வெளிப்படுத்தி, கடுமையாக உழைத்திருக்கும் இவர் நெல்லை வட்டார வழக்கு மொழிப் பேச்சிலும் உடல்மொழியிலும் மிரட்டியிருக்கிறார். தந்தை மீதுபாசம், பயம், மரியாதை… இதோடு சகோதரியின் வார்த்தைக்கும் கட்டுப்படுவது என்று ஒரு குடும்பத்திற்குள் பொறுப்பான மகனாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நிஜ வீரர்களே திகைத்துப் போகுமளவுக்கு உழைத்திருக்கிறார். அவரின் கடின உழைப்பு மற்ற ஹீரோக்கள் மத்தியில் முன்னணி இடத்திற்க்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி,ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்தி நம் மனதை கலங்க வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், பி.டி ஆசிரியராக நடித்திருக்கும் அருவி மதன், இயக்குநர் அமீர், லால், அழகம்பெருமாள், ரேகா நாயர் என படத்தில் நடித்த அனைவரும் கதையின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை காட்சிகளுக்கும் உயிரோட்டமாக சிறப்பாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே, தென்மாவட்ட கிராமங்களை அப்படியே பிரதியெடுத்து படமாக்கி கொடுத்திருக்கிறார்.
கதை, எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் சாதிய பிரச்சனைகளுக்கான காரணத்தையும் சொல்லி, அனைவரும் ஒன்றிணைவோம்… சாதிய மனப்பான்மை ஒழிப்போம் என்பதை அனைவருக்கும் உணர்த்தி இப்படத்தின் கதையை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்து, தமிழ் சமூகத்துக்கு அவசியமான ஒரு திரைப்படத்தை கொடுத்து இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில், ‘பைசன்’ விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.