“ஹைக்கூ” – திரைப்பட விமர்சனம்!

20

சென்னை:

ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா, ஃபெமினா ஜார்ஜ், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன், ஸ்ரீதேவி எஸ் கே ,அதிர்ச்சி அருண், அதியமான் ஏ ,சுப்பிரமணியன் சேது மற்றும் பலர்  நடித்துள்ள படம்தான் “ஹைக்கூ”. இப்படத்தை யுவராஜ் சின்னச்சாமி இயக்கி உள்ளார் .சித்து குமார் இசையமைத்துள்ளார் .

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஏகனின் தந்தை முடி திருத்தும் கடையை நடத்தி வருகிறார். ஏகனுக்கு தனது தந்தை முடி திருத்தும் தொழில் நடத்துவது பிடிக்கவில்லை. அவர் நன்றாக படித்து முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் ஏகன். அவர் படிக்கும் கல்லூரியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக அவர் அந்த கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார்.இன்னும் ஒரு வருடம் படித்தால் ஏகனின் படிப்பு முடித்து விடும் என்ற நிலையில் வேறொரு கல்லூரியில் சேர்த்து விட அவரது நண்பர்கள் உதவி செய்கிறார்கள்.  இறுதியில் ஒரு கல்லூரியில் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்க,  அந்த கல்லூரியில் ஏகன் மட்டும்தான் ஒரு ஆண் என்பதும் மற்றவர்கள் அனைவரும் பெண்கள் என்பது தெரிய வருகிறது. அந்தக் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் இவர் ஒருவர் மட்டும் தனியாக இருந்து பலவித சங்கடங்களை எதிர் கொண்டு தவிக்கிறார். இந்த சூழலில் அதே கல்லூரியில் படிக்கும் ஸ்ரீதேவி அப்பாலாவும், ஏகனும்  காதலிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தனது கல்லூரி படிப்பை முடித்த ஏகன் சென்னைக்குச் சென்று வேலை தேடி அலைகிறார்.

அப்போது முதல் காதலியான ஸ்ரீதேவி அப்பாலா ஏகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேலை கிடைத்து விட்டதா? என்று அடிக்கடி பேசி பிரச்சனையை உருவாக்குகிறார். அதனால் வெறுப்படைந்த ஏகன் அந்த காதலியை தவிர்த்து விட்டு தனது பணியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.  எல்லாவற்றையும் மறந்து விட்டு மென்பொருள் துறையில் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கும் ஏகன் கண்டிப்பான நிர்வாகியாக இருக்கிறார். அங்கு தற்காலிக பயிற்சிக்கான ஒரு பெண் பெவினா ஜார்ஜ் அங்கே வந்து சேருகிறார்.  அந்த பெமினா ஏற்கனவே ஒருவனை காதலித்து தோல்வி கண்டு இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.  ஒரு கட்டத்தில் காதலியை இழந்து தவிக்கும் ஏகனும் காதலனை விட்டு பிரிந்த பெமினாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க தொடங்குகிறார்கள்.

இந்த புரிதலுக்கு பிறகு இருவரும் மனம் விட்டு காதலில் ஈடுபட்ட போது ஏகன் தனது முதல்  காதலை நினைத்து அடிக்கடி ஸ்ரீதேவி அப்பாலாவைப்பற்றி சொல்லிக் கொண்டிருப்பதால் இருவருக்குமிடையே மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் இரண்டாவது காதலி ஃபெமினாவுக்கு ஏகன் மீது சந்தேகம் ஏற்படுகிறது.  இறுதியில் இருவரும் சில பிரச்சினைகளால் பிரிய நேரிடுகிறது.  இரண்டாவது காதலும் தோல்வி அடைந்து விடுமோ என்ற இந்த சூழ்நிலையில் ஏகன் தனது காதலில் வெற்றி பெற்றாரா? அல்லது தோல்வி அடைந்தாரா? என்பதுதான் ‘ஹைக்கூ’ படத்தின் மீதி கதை.

இப்படத்தின் கதாநாயகன் மனோ என்ற மனோகரன் கதாபாத்திரத்தில்  ஏகன் நடித்திருக்கிறார். ‘கனா காணும் காலங்கள்’ என்ற டிவி சீரியலிலும், ‘ஜோ’ என்ற திரைப்படத்திலும் ஏற்கெனவே நடித்து கவனம் ஈர்த்த இவர்,  சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவர் நாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது படம்தான் ‘ஹைக்கூ’. இதில் கல்லூரி மாணவனாகவும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞனாகவும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் உயிர் கொடுத்து நடித்து நியாயம் சேர்த்திருக்கிறார். குறிப்பாக காதலில் விழும் இளைஞனின் வெகுளித்தனத்தையும், காதல் தோல்விக்குப் பிறகு ஏற்படும் மனக்குழப்பத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.

கதாநாயகி கொடி என்ற பவளக்கொடியாக ஸ்ரீதேவி அப்பாலா நடித்திருக்கிறார். தன் காதலன் ஏகனின் குணம் பிடிக்காமல் தடுமாறுவது, அதனால் மனம் மாறி வேதனைப்படுவது என்று அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஏகனின் இரண்டாவது காதலியாக வரும் ஃபெமினா ஜார்ஜ் ஒரு எளிமையான  தோற்றத்தில் தோன்றினாலும் பல்வேறு விதமான நடிப்பு குறிப்பாக, தான் காதலிக்கும் நபரிடம் இருந்து முழுமையான காதல் கிடைக்கவில்லையே என்பதை உணர்ந்து அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. அவருடைய அழகும் நடிப்பும் சூப்பர் .

அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து  இருக்கின்றனர்.

இப்படத்தில் நடித்திருக்கும் சிங்கம் என்கிற நாய் மிக சிறப்பாக அனைவரும் ரசிக்கும் அளவிற்கச்  சிறப்பாக நடித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.  ஒரு உன்னதமான காதல் கதையில் காட்சிகளைக் கண்ணுக்கு உறுத்தாத வகையில் பல வித வண்ணங்களில் படமாக்கி இருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் சித்து குமாரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அவரது அட்டகாச மான பின்னணி இசையும், காதல் நினைவுகளை நினைவூட்டும் பாடல்களும் இப்படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளன.

கதை எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் சின்னசாமி, ஏகன் படிக்கும் கல்லூரியில் ஒரேமாணவன் மீதி எல்லாம் மாணவிகள் என்கிற சுவையான கதை களத்தில் படத்தைத் தொடங்கி, காதலில் விட்டுக் கொடுப்பது முக்கியம்…அதே நேரத்தில், சுயமரியாதையை விட்டுக் கொடுப்பது காதல் அல்ல என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு  காதல் கதை என்பதால் காதலில் உள்ள பிரச்சினைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மிக அழகான இந்தக் கதை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலின் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில்…முதல் காதல் கொடுத்த வலியோடு அடுத்த காதலை எதிர்கொள்ளும் மனிதர்களின் தவிப்பையும், எதிர்பார்ப்பு களையும் பேசுகிறது இந்த ‘ஹைக்கூ’ திரைப்படம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.