“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

5

CHENNAI:

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம் அப்படியொரு அனுபவமாக அமைந்துள்ளது. தெலுங்கில் அறிமுகமான ‘கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் நோபடி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீதேவி, யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், அக்டோபர் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் . பத்திரிகையாளர்கள், ஊடகத்தினருக்காகத் திரையிடப்பட்ட முன்னோட்டக் காட்சிகள் மற்றும் திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்களும் தனது நடிப்பை பாராட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.

படம் குறித்து ஸ்ரீதேவி பகிர்ந்து கொண்டதாவது, “‘ஹைக்கூ’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, படத்தின் முன்னோட்டக் காட்சிகளிலேயே, குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரிடமிருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு நடிகையாக நம் பணியை ரசிகர்கள் கொண்டாடுவதுதான் நமக்கு மனநிறைவு தரும். அந்த உணர்வை ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் கொடுத்திருக்கிறது”.

மேலும், “இயக்குநர் யுவராஜ் கதையைச் சொன்னபோதே என் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான பல அடுக்குகள் இருப்பதை உணர்ந்தேன். சில நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், டப்பிங் பணிகளை முடித்த பிறகும்கூட அந்தக் கதாபாத்திரத்திலிருந்து என்னால் எளிதாக வெளிவர முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் என்னுள் சுமந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் எனக்கு பொக்கிஷம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி மற்றும் இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணீஷ் பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். தமிழக வெளியீட்டுப் பணிகளை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் பி. சக்திவேலன் மிக சிறப்பாக மேற்கொண்டு அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.