சென்னை:
18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரிக்க, பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரைம் லீகல் டிராமா தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. ஆறு எபிசோடுகள் zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் பருத்தி வீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, பிரேம்குமார், கல்லூரி வினோத், கவிதா பாரதி, ஆறு பாலா, பீட்டர் ஜே. சந்திரன், ஷிவின், பருல் சம்பரியா, பவன், அக்ஷயா வி, பிரியங்கா ரோபோசங்கர், அபர்ணா சுந்தர்ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘சட்டமும் நீதியும்’ முதல் பாகம் zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘சட்டமும் நீதியும்’ இரண்டாம் பாகம் தற்போது உருவாகி அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறது.
இந்த இணைய தொடரின் கதையைப் பொருத்தவரையில்,
நீதி மன்ற பார் கவுன்சில் தலைவராக இருக்கும் ஒரு சிறந்த பெண் வழக்கறிஞரான வரலட்சுமி சரத்குமாரின் கணவர் பிரேம் குமார், காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் நிலையில் ஒரு நட்சத்திர விடுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரை நான்கு போலீசாரே முன்பகை காரணமாக சுட்டுக்கொன்றனர் என்றும், மறுபக்கம் அவர் மன உளைச்சலால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. தன் கணவரின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக அவரது மனைவி வரலட்சுமி சரத்குமார் நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கறிஞரான அவரே நான்கு போலீசாருக்கு எதிராக வாதாடுகிறார்.
ஆனால், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அந்த காவல்துறை அதிகாரியின் மரணத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் கதறி அழுகின்றனர். இந்த சூழலில் குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்காக வாதாட யாரும் முன்வராத நிலையில், வழக்கறிஞர் சங்கத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக ஆஜராகிறார் நோட்டரி வழக்கறிஞர் பருத்தி வீரன் சரவணன். நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடக்கிறது.
தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தில் பலமான வாதங்களை முன்வைக்கிறார் வரலட்சுமி சரத்குமார். இறுதியில் உண்மையிலேயே நான்கு போலீசார் வரலட்சுமி சரத்குமாரின் கணவர் பிரேம் குமாரை சுட்டு கொன்றார்களா? காவல்துறையில் அதிகாரி பிரேம் குமாரின் மரணத்திற்கு என்ன தான் காரணம் என்பதை மிக சுவாரஸ்யமான விறுவிறுப்பான குற்ற விசாரணையையும் சட்டத்தின் நுணுக்கங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இணைய தொடர்தான் ‘சட்டமும் நீதியும் 2’.
முதல் பாகத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்த பருத்தி வீரன் சரவணன், வழக்கறிஞர் சங்கத்தின் எதிர்ப்பை மீறி வாதாட ஒப்புக் கொள்ளும் போது அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது காட்டும் பரிவையும் எதிர்தரப்பின் ஆதாரங்களைக் கண்டு பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்படும் விதம் என ஒவ்வொரு காட்சியிலும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். நீதிமன்றத்தில் மிகவும் நிதானமான கேள்விகளால் எதிர்தரப்பைத் திணறடிக்கும் காட்சிகளில் சரவணனின் சிறந்த நடிப்பை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
வரலட்சுமி சரத்குமார் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் நடிக்கும் படங்களில் வேகமாக வசனங்களைப் பேசுவதில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கும் சூழலில் இந்தத் தொடரிலும் நீண்ட நீதிமன்ற வசனங்களைத் தடுமாற்ற மின்றிப் புரியும் வகையில் பேசி அசத்தியிருக்கிறார்.
வரலட்சுமி சரத்குமாரின் கணவராக நடித்திருக்கும் பிரேம்குமார், சரவணனின் ஜூனியராக நடித்திருக்கும் லாவண்யா, குற்றவாளி போலீஸ்காரர்களாக நடித்திருக்கும் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணனின் தனது ஒளிப்பதிவில் உண்மையிலேயே நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிரமிக்க வைக்கிறார்.
விபின் பாஸ்கரின் பின்னணி இசை கதையின் வேகத்தை முடுக்கி விடுவதுடன், விசாரணைக் காட்சிகளில் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
இயக்குநர் பாலாஜி செல்வராஜ், ஒரு சாதாரண கொலை வழக்கு விசாரணையாகக் கதையைச் சொல்லாமல், சம்பவங்களின் பின்னணியை நான்-லீனியர் பாணியில் வெளிப்படுத்தி சஸ்பென்ஸை அதிகரித்திருக்கிறார். ஒரு திரைப்படம் போல் இந்த இணைய தொடரின் ஒவ்வொரு எபிசோடு காட்சிகளை சிறந்த முறையில் யூகிக்க முடியாதபடி திருப்பங்களை உருவாக்கி வியக்க வைத்து இருக்கிறார். இதில் வரும் சட்டப் போராட்டங்களும், காவல்துறை விசாரணைகளும் எவ்விதத் தேக்கமுமின்றி சீரான வேகத்தில் நகர்வதற்கு திரைக்கதை அமைவதற்கு எந்த அளவுக்கு உழைத்து இருக்கிறார் என்பதை இந்த தொடர் உணர்த்துகிறது.
மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும் 2’ இணைய தொடர் நீதிமன்ற வாதங்களை மிக சிறந்த முறையில் உருவாக்கி ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.