‘எனிமி ஆஃப் த ஸ்மக்ளர்’ – திரைப்பட விமர்சனம்!

3

சென்னை:

எஸ்.ஆர்;  டிரீம் ஸ்டியோஸ் சார்;பில் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ படத்தை எழுதி இயக்கி, தயாரித்தி ருக்கிறார் டி.சமய முரளி. இப்படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், சரண் சக்தி, பாலசரவணன், ஸ்மேகா மணிமேகலை, காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி, சமய முரளி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

துபாயில் பெரிய கடத்தல் கும்பலின் தலைவராக இருக்கிறார் லால்.  அவர் அனுப்பும் போதைப் பொருட்கள், தங்கக் கட்டிகள் போன்ற கடத்தல் சரக்குகளை சென்னை துறைமுகத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கண்டெய்னர் லாரி மூலம் கடத்தி இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறார் ஜே.டி.சக்கரவர்த்தி.  இந்த சூழ்நிலையில் சரண் சக்தியும் பால சரவணனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களில் பால சரவணனுக்குச் சுங்கத்துறை அலுவலகப் பணிகளுடனும் தொடர்பு இருப்பதால்.  தனது வீட்டை மீட்கவும் குடும்பக் கடனை அடைக்கவும் எதையாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடி நிர்பந்தத்தில் இருக்கும் வறுமையில் வாழும் சரண் சக்தி, எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில், போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யம் நடத்தும் ஜே.டி. சக்கரவர்த்தியுடன்  இணைகிறார். அவருடன்  நண்பர் பால சரவணனும் அவருக்குத் துணையாக  செல்கிறார்.

இதற்கிடையே, துபாயில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவான லால்  3 ஆயிரம் கிலோ போதைப்பொருளை கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்த முயற்சி மேற்கொள்கிறார். குஜராத் துறைமுகத்திற்கு வரும் அந்த போதைப்பொருள் கண்டய்னரை வெற்றிகரமாக மீட்பதற்கான பணியை ஜெ.டி.சக்கரவர்த்தி, சரண் சக்தியிடம் ஒப்படைக்கிறார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அந்த பிரம்மாண்டப் போதைப்பொருள் கண்டெய்னர் லாரி துறைமுகத்திலிருந்து வெளியேறியதும் திடீரென மர்மமான முறையில் மாயமாகிறது. 3 ஆயிரம் கிலோ போதைப் பொருளை கடத்தப்படும் தகவலை அறிந்து, கடத்தல் பின்னணியில் இருக்கும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் பிடிப்பதற்கன முயற்சியில் இந்திய வருவாய் சேவை அதிகாரி சமயம் முரளி ஈடுபடுகிறார். மர்மமான முறையில் கடத்தப்பட்டு மாயமான 3 ஆயிரம் கிலோ போதைப் பொருளை கண்டுபிடிக்க சமயம் முரளி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? சரண் சக்தி-பாலசரவணன் இருவரின் கதி என்னவாயிற்று? என்பதுதான் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ படத்தின் மீதிக் கதை.

சரண் சக்தி கதையின் மையக் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். தனது குடும்ப சூழ்நிலைகளால் தவறான பாதையில் செல்லும் ஒரு மனிதனின் மனநிலையையும், அதன் விளைவுகளையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

பால சரவணன் தனது வழக்கமான நகைச்சுவைப் பாணியைத் தாண்டி, கதையின் ஓட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடித்திருக்கிறார். சரண் சக்தியுடனான நட்பும், கதையில் அவர் வகிக்கும் பங்கும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. வழக்கமான வசன காமெடிக்கு அப்பால், கதையோட்டத்திற்கு வலு சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார்.

பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் வரும் ஸ்மேகா மணிமேகலை, கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார்,  காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் கவின் பாஸ்கருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இப்படத்தின் கதைக்களம் அமைந்திருப்பதால், அதற்கேற்றவாறு தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாம் டேனியலின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். சமயம் முரளியின் பிண்ணனி இசை கதைக்களத்திற்கு ஏற்ப மிக சிறப்பாக பயணித்திருக்கிறது.

ஒரு உண்மையான சுங்கத்துறை அதிகாரியான சமயமுரளி, இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். சுங்கத்துறை விசாரணைகள், சரக்குப் பரிமாற்றத்தில் நடைபெறும் முறைகேடுகள், கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகள் எனத் துறை சார்ந்த நுணுக்கங்களைத் திரைக்கதையில் மிக சிறப்பாக  இணைத்து சர்வதேச கடத்தல் கும்பலின் வலிமையான நெட்வொர்க், பல துறைமுகங்களில் அவர்கள் நடத்தும் கடத்தல் தொழிலுக்கு, சில சுங்கத்துறை அதிகாரிகளே உதவியாக இருப்பது போன்ற அனைத்து விவரங்களையும் துல்லியமாக எடுத்துரைத்து, யதார்த்தத்துக்கு நெருக்கமாக இதை படைத்துள்ள இயக்குநர் சமய முரளியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில், ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’  ஒரு மாறுபட்ட கதை களம் என்றாலும்  கிரைம் ஆக்ஷன் திரில்லர் ரசிகர்களுக்கு  விருந்து அளிக்கும் படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.