உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ – நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

3

CHENNAI:

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை   எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், கதைக்களம், நட்சத்திரங்களின் பங்களிப்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில்…,

தயாரிப்பாளர் எம். மூர்த்தி பேசியதாவது,

“நான் முதலில் நடிகராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். இன்று தயாரிப்பாளராக உங்கள் முன்னால் நிற்கிறேன். இயக்குநர் தீரன் அருண்குமார் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, மிகவும் புதுமையான கதைக்களமாக இருந்தது. வேறு சில தயாரிப்பாளர்களிடமும் கதையைச் சொல்லியிருந்தாலும், அதிக காலம் எடுத்துக்கொண்டதால், இந்தப் படத்தைத் நானே தயாரிக்க சம்மதித்தேன். இந்தப் படம் உருவாக எனது முழு ஆதரவையும் கொடுத்தேன்.இதுபோன்ற புதுமையான கதையைப் படமாக்கும்போது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் எனது மனைவி, மகளிடம் கதையைப் பற்றிக் கூறியபோது, இது வித்தியாசமான முயற்சி என்றும், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பேசும் கதை என்றும் ஊக்கமளித்தார்கள். இந்தப் படத்தை உருவாக்குவதில் கதாநாயகன் வெற்றியின் பங்களிப்பு மிக முக்கியமானது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரவு, பகல் பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.

நான் இதுவரை ஆயிரக்கணக்கான படங்களை பார்த்திருப்பேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், ‘பிளாக் கோல்டு’ இந்திய சினிமாவில் ஒரு புதுமையான படமாக இருக்கும். படத்தின் மேக்கிங்கும் மிக சிறப்பாக வந்துள்ளது. ஒரு படத்தைச் சிறிய படம், பெரிய படம் என்று பார்ப்பதைவிட நல்ல படமா என்பதுதான் முக்கியம். இயக்குநர் ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்தில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் நண்பர்கள் அனைவரும் இப்படத்திற்குத் தங்களது ஆதரவை வழங்க வேண்டும். இந்தப் படத்தைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசியதாவது,

“‘பிளாக் கோல்டு’ படக்குழு சார்பாக ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் வெற்றியுடன் இது எனக்கு இரண்டாவது படம். அவர் இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ‘பிளாக் கோல்ட்’ படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும். நடிகை அபிராமியின் நடிப்புக்கு நான் ஏற்கெனவே ரசிகன். இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் துணிச்சலான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குநர் ஏ. வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் பார்த்துப் பழகிய ஜப்பான் குமாரை இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தீவிரமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். நடிகர்கள் அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு அவர்களைப் பார்க்கும் இயக்குநர்களின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமி பேசியதாவது,

“‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனக்கு முதல் படம். இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமார் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். விரைவில் இதே இடத்தில் நடைபெறும் படத்தின் வெற்றிச் சந்திப்பில் மீண்டும் அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி, வணக்கம்.”

நடிகர் ஜப்பான் குமார் பேசியதாவது,

“இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் தீரன் அருண்குமார் என்னை அழைத்துப் பேசினார். நான் இதுவரை சிறிய காமெடி கதாபாத்திரங்களில்தான் நடித்து வருகிறேன் என்று கூறினேன். ஆனால், இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். அவருடைய நம்பிக்கைக்காகவே இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தேன்.

இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்பதைவிட, படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஊடக நண்பர்களும் ரசிகர்களும்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.அனைவருக்கும் நன்றி.”

நடிகர் கராத்தே வெங்கடேஷ் பேசியதாவது,

“இந்தப் படக்குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த கலைஞர்கள், இளம் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் தீரன் அருண்குமார் என்னிடம் முதலில் கதையைச் சொன்னபோதே, எனக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்திருந்தார். குறிப்பாக, உயிரைப் பறிக்கும் கதாபாத்திரமாக இருந்தால்தான் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று கூறினார்.

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. இயக்குநர் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்திலும் இரண்டு, மூன்று உயிர்களை எடுத்திருக்கிறோம். அதை ரசிகர்கள் திரையில் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். அனைவரும் ‘பிளாக் கோல்டு’ படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். நன்றி.”

நடிகர் டெலிபோன் ராஜ் பேசியதாவது,

“எல்லாப் படங்களுக்கும் படப்பிடிப்புக்குச் செல்வதைப் போலத்தான் இந்தப் படத்திற்கும் சென்றேன். ஆனால், இதில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது. ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் ஒரு முக்கியமான விஷயம் இருந்தது. இயக்குநர் தீரன் அருண்குமார் மிகவும் பொறுமையாக, ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல எனக்குக் காட்சிகளை விளக்கிக் கொடுத்தது மிகவும் பிடித்திருந்தது.

படப்பிடிப்பிலும் டப்பிங் பணியின்போதும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒவ்வொரு நடிகரையும் அந்தந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். சில கதாபாத்திரங்களின் தோற்றத்தைப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது. அந்த அளவுக்கு ஒவ்வொருவருடைய தோற்றமும் கதாபாத்திரங்களும் வித்தியாசமாக அமைந்துள்ளன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஊடக நண்பர்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகை சபீதா ராய் பேசியதாவது,

“இங்கு வந்திருக்கும் திரைப்பட உறவுகளுக்கும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக சினிமாவை நேசித்து, அதில் ஒரு நல்ல வாய்ப்புக்காகப் போராடி வருகிறேன். அந்த வகையில் ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனக்கு ஒரு முக்கியமான மேடையாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு மல்லி என்ற கதாபாத்திரத்தின் மூலம் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமாருக்கு எனது மனமார்ந்த நன்றி.

இயக்குநர் தீரன் அருண்குமார் ஒரு சிறந்த கேப்டன். எவ்வளவு பரபரப்பான சூழ்நிலையாக இருந்தாலும் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்படுவார். படப்பிடிப்புத் தளத்தில் அனைவரையும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார். அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமியின் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் அவர் முக்கியமான ஒளிப்பதிவாளராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நடிகர் வெற்றி படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் இருப்பார். ஆனால் கேமரா முன்பு நடிக்கும்போது அவருடைய நடிப்பும் ஹீரோயிசமும் வியக்க வைக்கும். நடிகர் ஏ. வெங்கடேஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அதேபோல், என்னுடைய கதாபாத்திரத்துடன் தொடர்புடைய நைனா கதாபாத்திரத்தில் நடித்த அருள் சங்கருடனும் நல்ல நட்பு உருவாகியுள்ளது. சிறிய படம், பெரிய படம் என்று இனிமேல் படங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டாம். சிறிய படங்கள்தான் இன்றைக்குப் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றன. நல்ல கதையும் உழைப்பும் இருந்தால் எந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற முடியும். ‘பிளாக் கோல்டு’ படமும் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். நன்றி.”

இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ் பேசியதாவது,

“இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை வெளியிடும் ஆதவா ரமேஷ், ஆகியோருக்கு முதலில் நன்றி.

‘பிளாக் கோல்டு’ முழுக்க முழுக்க இயக்குநர் தீரன் அருண்குமாரின் படைப்பு. ஒரு நாள் செய்தித்தாளில் தலைமுடி தொடர்பான ஒரு செய்தியைப் படித்தபோது, அதை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்கலாம் என்று நான் நினைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு தீரன் இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோது, நான் படித்த அதே செய்தியின் பின்னணியில் கதையை உருவாக்கியிருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாத ஒரு விஷயத்தைப் புதுமையான முறையில் அணுகியிருக்கிறார். ‘பிளாக் கோல்டு’ என்ற தலைப்பும் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியமானது சரியான நடிகர் தேர்வு. அந்த வகையில் தீரன் இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார். குறிப்பாக, அருள் டி. சங்கர் உள்ளிட்ட நடிகர்களின் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளது. அபிராமி, சபீதா ராய், ஜப்பான் குமார் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். கதாநாயகன் வெற்றி மிகவும் அமைதியானவர். ஆனால் கேமரா முன்பு அவருடைய நடிப்பு வியக்க வைக்கும். என்னுடன் இணைந்து நடித்த காட்சியிலும் மிகக் குறைவான ரியாக்ஷன்களைக் கொண்டே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நான் இன்னும் முழுப் படத்தையும் பார்க்கவில்லை. எனது காட்சிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் கதையின் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இறைவனின் அருளாலும், இயற்கையின் துணையாலும், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவாலும் ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் அருள் டி. சங்கர் பேசியதாவது,

சினிமாவில் எனது 16 ஆண்டுகால பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். ஒரு டூயட் பாடல் இல்லாமல், என்னை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் வெளிப்படுத்துங்கள் என்று இயக்குநர் தீரணிடம் கூறினேன். அதற்கேற்ற வகையில் நைனா ராஜா என்ற கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஊடகங்களிடம் எனக்காக எழுதும்படி கேட்டதில்லை. ஆனால் முதல்முறையாக, இந்தப் படத்தில் எனது நடிப்பு நன்றாக இருந்தால் அதைப் பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் எனக்கு நைனா ராஜா கதாபாத்திரம் கிடைத்ததே ஒரு சுவாரசியமான அனுபவம். மாதங்கி மூலம் இயக்குநர் தீரன் அறிமுகமானார். அவருடைய முந்தைய படத்தைப் பார்த்த பிறகு, ஆறு மாதங்கள் கழித்து என்னை அழைத்துக் கதை சொன்னார். கதாபாத்திரத்தின் தோற்றம் முதல் நெற்றியில் வைக்கும் செந்தூரம், அணியும் ஆபரணங்கள் வரை ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு உருவாக்கியிருந்தார். அந்தத் தோற்றத்திற்காக மேக்கப் கலைஞர் உமாசங்கருடன் இணைந்து பல முயற்சிகள் மேற்கொண்டோம். சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர் மெட்ரோ மகேஷிடம் ஏழு நாட்கள் முறையான பயிற்சியும் பெற்றேன். இயக்குநரும் உதவி இயக்குநர்களும் பயிற்சியின்போது உடனிருந்து ஊக்கமளித்தது மறக்க முடியாத அனுபவம்.

இயக்குநர் தீரனின் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு இயல்பாகவும், எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலும் அவர் எழுதியிருக்கிறார். படத்தின் முன்திட்டமிடலும் மிகச் சிறப்பாக இருந்தது. குறைந்த கால்ஷீட்டில் பல காட்சிகளைப் படமாக்கியிருப்பது அவரது திட்டமிடலுக்குச் சான்று. சில கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் படக்குழுவினர் மிகுந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். எனது கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் தீரன் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி மூன்று இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கும் எனது நடிப்பிற்கும் ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கலை பேசியதாவது,

தயாரிப்பாளர் மூர்த்தி சார் பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைச் சொல்லியும், அதன் வித்தியாசமான களத்தைக் கருத்தில் கொண்டு யாரும் தயாரிக்க முன்வரவில்லை. அப்போது இயக்குநர் தீரன் அருண்குமார் எங்களிடம் வந்து கதையைச் சொன்னார். கதை பிடித்திருந்ததால் மூர்த்தி சார் தனது மனைவி, மகளிடம் ஆலோசித்து இப்படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தார். அதன் விளைவாகத்தான் இன்று ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் உங்கள் முன்னால் நிற்கிறது. படத்தின் தலைப்புக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்பதைப் படம் பார்க்கும்போது தெரிந்துகொள்வீர்கள்.

நடிகர் வெற்றி படப்பிடிப்புக்கு எப்போதும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே வந்து தயாராகக் காத்திருப்பார். ஏ. வெங்கடேஷ், கராத்தே வெங்கடேஷ், ஸ்ரீபா, கிருஷ்டி, அருள் டி. சங்கர், வியாழக்காரன் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றினார்கள். இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மூன்று பாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் தனது முதல் படமாக இருந்தாலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். எடிட்டர் தினேஷ் மற்றும் இயக்குநர் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினர். ஸ்டண்ட் மாஸ்டர் மெட்ரோ மகேஷ், நடன இயக்குநர் ரிச் சாம்சன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி, வணக்கம்.

நடிகை அபிராமி பேசியதாவது,

ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலான விஷயம். அந்தக் கதாபாத்திரத்தை அபிராமி மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் செய்திருக்கிறார் என்று பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, வெற்றி நடிக்கிறார் என்று தெரிந்ததும் கதை நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இயக்குநர் தீரன் கதையை மிகவும் தெளிவாகவும் வித்தியாசமாகவும் விளக்கினார். ஒரு அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துவது போல அவ்வளவு நேர்த்தியாகக் கதையை எடுத்துச் சொன்னார்.

முன்பு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உறுதியாகும் என்று எதிர்பார்த்தும், கடைசி நேரத்தில் கைநழுவிய அனுபவங்கள் எனக்கு இருந்திருக்கின்றன. அதனால் இந்தப் படத்திலும் எனது கதாபாத்திரம் உறுதியாக இருக்கிறதா என்று பலமுறை இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் அவர் என் மீது முழு நம்பிக்கையுடன் இருந்தார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அபிராமிதான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் உறுதியாக முடிவெடுத்து என்னை அழைத்தது ஒரு நடிகையாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது. அதற்காக இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை எனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும், எனது பயணத்தையும் ஊடகங்கள்தான் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. அடுத்த படம் எப்போது, ஏன் புதிய படங்களில் நடிக்கவில்லை என்று தொடர்ந்து கேட்டு எனக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் வெளியாகும்போதும் ஊடக நண்பர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். உங்கள் ஆதரவின் மூலம்தான் எங்களைப் போன்ற கலைஞர்கள் தொடர்ந்து வளர முடியும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் தீரன் அருண்குமார் பேசியதாவது,

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே அரங்கில் உங்களைச் சந்திப்பது, காணாமல் போன குழந்தை மீண்டும் கிடைத்தது போன்ற உணர்வைத் தருகிறது. எனது முதல் படமான ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் உங்களைச் சந்தித்தேன். தற்போது எனது இரண்டாவது படமான ‘பிளாக் கோல்டு’ மூலம் மீண்டும் உங்கள் முன்னால் நிற்கிறேன். முதல் படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான முயற்சியில் இருந்தபோது, தெலுங்கில் ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கான கதையைச் சொல்லியிருந்தேன். சில கட்டங்களைக் கடந்தும் அந்தப் படம் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் தமிழுக்கே திரும்பி, புதுமையான ஒரு கதையைத் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தேன். பல தயாரிப்பாளர்களிடம் கதையைச் சொன்னபோதும் யாரும் துணிவாக முன் வரவில்லை.  மலையாள சினிமா போல வித்தியாசமான கதைகளுக்கான வரவேற்பு தமிழிலும் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அந்தச் சூழலில்தான் ‘பிளாக் கோல்டு’ உருவானது.

இந்தப் படத்திற்கு வெற்றியைத் தேர்வு செய்ததற்குக் காரணம், குறைந்த பட்ஜெட்டிலும் குறைந்த நாட்களிலும் பணியாற்றக்கூடிய அதே நேரத்தில் கதைக்கு ஏற்ற கதையின் நாயகனாக அவர் இருப்பார் என்று நம்பியதுதான். அவரிடம் கதையைச் சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். படத்தின் நாயகி உடல்நலக் குறைவால் இன்றைய நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அபிராமி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அருள் டி. சங்கர் நடித்த சுருள் ஆயுதச் சண்டைக் காட்சிக்காக எட்டு முதல் ஒன்பது நாட்கள் பயிற்சி அளித்தோம். படத்தில் சுமார் ஒன்றரை நிமிடம் மட்டுமே வரும் அந்தக் காட்சிக்காகவும் அவர் கடுமையாக உழைத்தார். அதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் “மெட்ரோ” மகேஸ் மாஸ்டருக்கு நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஏ. வெங்கடேஷ் போன்ற அனுபவமிக்க கலைஞர் எங்களுடன் மிகவும் நட்பாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றியது மகிழ்ச்சி. சபீதா ராய், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக ஜப்பான் குமாருக்கு வசனங்கள் இல்லாத கதாபாத்திரம். பேசாமல் உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிதான விஷயமல்ல; அதை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஆனால் இறுதித் தீர்ப்பு நவம்பர் 13ஆம் தேதி படம் வெளியாகும்போது ரசிகர்களிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும்தான் கிடைக்கும். சிறிய படம், பெரிய படம் என்ற பிரிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. கதையின் உள்ளடக்கம்தான் ஒரு படத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரித்திருக்கிறார்கள்; அதே ஆதரவை எங்களுக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் மூர்த்தி சார்தான். ஆரம்பம் முதல் இன்று வரை அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், மிகப்பெரிய சினிமா ரசிகராகவே என்னுடன் பயணித்திருக்கிறார். படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் என அனைத்தையும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்வார். அதிகாலை ஐந்து மணிக்குப் படப்பிடிப்பை முடித்துவிட்டுச் சென்றாலும், அன்றைய படப்பிடிப்பு எப்படி நடந்தது, காட்சிகள் நன்றாக வந்ததா என்று விசாரிப்பார். இப்படிப்பட்ட சினிமா மீதான ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியம். பணம் இல்லாமல் பல நல்ல கதைகள் திரைப்படமாக முடியாமல் நிற்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் எனக்கு மூர்த்தி சார் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.

எனது வெற்றியை விட அவர் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம். அவர் வெற்றி பெற்றால் என்னைப் போன்ற பல புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பளிக்க முடியும். இந்தப் படத்தின் தொடக்கத்திலிருந்து பல தடைகளைச் சந்தித்தோம். படம் பாதியில் நின்றுவிடும், அடுத்த கட்டத்திற்குச் செல்லாது, வியாபாரம் ஆகாது என்று பலரும் கூறினார்கள். ஆனால் ஒவ்வொரு தடையையும் கடந்து படத்தை முடித்தோம். தற்போது வியாபாரமும் முடிந்து, திரையரங்க வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறோம்.. அதன் வெற்றியைத் தீர்மானிப்பது உங்கள் ஆதரவுதான். நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் ‘பிளாக் கோல்ட்’ படத்தைப் பார்த்து எனது உழைப்பும், எங்கள் குழுவின் முயற்சியும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். மீண்டும் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொண்டாட்டத்தில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் வெற்றி பேசியதாவது,

‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம். பொதுவாக பிளாக் கோல்டு என்றால் கச்சா எண்ணெய் அல்லது மிளகு என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் நாங்கள் குறிப்பிடுவது மனிதர்களின் தலைமுடியைத்தான். தலைமுடிக்குப் பின்னால் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மிகப்பெரிய வணிகமும், அதன் பின்னணியில் இயங்கும் வலையமைப்பும்தான் இந்தப் படத்தின் கதைக்களம். இந்தப் பின்னணியில் ஒரு குடும்பக் கதையையும், அப்பா – மகன் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவையும் இணைத்து இயக்குநர் தீரன் உருவாக்கியிருக்கிறார்.

இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமான கதைக்களத்துடன் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகியுள்ளது. இதில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள், இயக்குநர் குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘பிளாக் கோல்டு’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் படத்தைப் பார்த்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எப்போதும் அளிக்கும் ஆதரவைப் போல இந்தப் படத்திற்கும் ஊடக நண்பர்களும் ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும். நன்றி.

இப்படத்திற்கு சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.