’வில்’ (உயில்) திரைப்பட விமர்சனம்!

31

சென்னை:

ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘வில்’  படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.சிவராமன். இப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலக்யா, பிர்லா போஸ், பதம் வேணு குமார், மோகன் ராமன் , ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஆந்திராவை சேர்ந்த பெரிய தொழிலதிபரான  பதம் வேணுகோபால் தன்னுடைய சொத்துக்களை அவர் இறப்பதற்கு முன் தன் இரண்டு மகன்களுக்கும்,  சென்னையில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பை ஷ்ரத்தா என்ற பெண்ணுக்கும் உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். அதனால் பதட்டமடைந்த அவரது இரு மகன்களும் சென்னையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை ஊர் பெயர் தெரியாத யாருக்கோ அதுவும் ஒரு பெண்ணுக்கு எழுதி வைத்து விட்டதால் அந்த குடியிருப்பை அபகரிக்க திட்டமிடுகின்றனர்.  ஷ்ரத்தா மாதிரியே போலியாக வேறு ஒரு பெண்ணை நீதிமன்றத்தில் நீதிபதி முன் நிறுத்துகிறார்கள். ஆனால் பெண் நீதிபதியான சோனியா அகர்வால் அந்தப் பெண் மீது சந்தேகப்படுகிறார்.  அவர்தான் உண்மையான வாரிசா என்பதை தெரிந்து கொள்ள நீதிமன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் விக்ராந்திடம் இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஒப்படைக்கிறார்.
இந்த வழக்கை விசாரிக்க முன்வந்து பல இடங்களில் அலசி ஆராய்ந்தபோது ஆள் மாறாட்டம் செய்து சென்னையில் உள்ள குடியிருப்பை அபகரிக்க திட்டம் போட்ட விஷயம் தெரிய வருகிறது.  அப்படி என்றால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் யார்? அவர் எங்கு இருக்கிறார்? என்று தேட ஆரம்பிக்கும்போது அவர் ஊட்டிக்கு போகும் வழியில் உள்ள கோத்தகிரியில் இருப்பது தெரிய வருகிறது.  அங்கே சென்று விக்ராந்த் அந்த பெண்ணை கண்டுபிடித்து, சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சொத்தை ஷ்ரத்தா என்ற பெண்ணுக்கு வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் ‘வில்’ படத்தில் மீதி கதை.
நீதிபதியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து  அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஆங்கிலம் கலந்த தமிழ் பேசி எப்படி  துல்லியமாக கணித்து வழக்கை கையாள்வது என்று தனது கை தேர்ந்த நடிப்பின் மூலம்  வித்தியாசமாக கதைக்கு மெருகேற்றியுள்ளார்.

உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், சிறப்பு தோற்றம் போல் வந்தாலும், உயிலில் எழுதப்பட்ட உண்மை வாரிசு யார் என்பதை கண்டறிவதற்கு அவர் மேற்கொள்ளும் முயற்சி படம் முழுவதும் பயணித்து  துடிப்பான ஒருவராக  தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

ஷ்ரத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அலக்கியா தந்தையின் அன்பு மகளாக காண்பிக்கப்பட்டு, பின்னர் தந்தையை காப்பாற்ற பணத்திற்காக சூழ்நிலை காரணமாக ஒருவரிடம் மாட்டிக் கொண்டு  தவிக்கும் காட்சிகளிலும் தனது அளவான நடிப்பு மூலம் பலம் சேர்த்து படம் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைத்திருக்கிறார்.

பெரிய தொழிலதிபரான  பதம் வேணுகோபால் சில காட்சிகளில் வந்தாலும் கதைக்கு ஏற்றவாறு  அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், இந்த கதைக்கு ஏற்ப பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

நீதிமன்ற காட்சிகளை எதார்த்தமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு ரசிக்க முடிகிறது.

உயில் தொடர்பான சட்ட நுணுக்கமான உண்மை கதையை பின்னணியாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் எஸ் .சிவராமன். பரபரவென சென்ற முதல் பாதி , சட்டென இரண்டாம் பாதியில்.வேகம் குறைந்து,  கருக்கலைப்பு, குழந்தையில்லாமல் பெற்றோர்கள் படும் இன்னல்கள், ஒரு பணக்காரரின் உயில் என்று பலதரப்பட்ட பிரச்சனைகளை கையிலெடுத்து வேறு கோணத்தில் கதையை எடுத்து செல்லும்போது, இப்படத்தை சற்று தொய்வடைய செய்கிறது.

மொத்தத்தில், ‘வில்’  படம் சட்டத்தின் கையில்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.