“லைசென்ஸ்” திரைப்பட விமர்சனம்!

88

சென்னை:

விஜய் டிவி புகழ் பாடகி ராஜலக்ஷ்மி செந்தில் நடிகையாக அறிமுகமாகும் ’லைசென்ஸ்’ படத்தில்  ராதாரவி அபி நட்சத்திரா, வையாபுரி  நமோ நாராயணா, கீதா கைலாசம், பழ கருப்பையா தான்யா, அனன்யா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை  என்.ஜீவானந்தம் தயாரித்திருக்கிறார். கணபதி பால முருகன் இயக்கி இருக்கிறார். இசை : பைஜூ ஜாக்கப். ஒளிப்பதிவு: காசி விஸ்வநாதன். பி ஆர் ஓ: கே. எஸ். கே. செல்வா.

சிறுவயதில் இருந்தே காவல்துறையில் ஒரு பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ராஜலட்சுமி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இந்நிலையில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யும் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்கும்  முயற்சியில் ஈடுபடுகிறார். இதற்கு இடையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு சிறுமிக்காக கோபமடைந்த ராஜ லட்சுமி,  அந்த குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று போராடுகிறார். சிறுமியை பாலியல் செய்த தொழிலதிபரை கைது செய்ய காவல்துறையிடம் முறையிடுகிறார். இதனால் ராஜலட்சுமிக்கு பல எதிரிகள் உருவாகுகிறார்கள்.

இதனால் தன்னையும் தன்னை சார்ந்த பெண்களுக்கும் துப்பாக்கி லைசென்ஸ் வாங்க முடிவு செய்கிறார். துப்பாக்கி லைசென்ஸ் வாங்குவதற்காக காவல்துறையிடம் மனு கொடுக்கிறார். ஆனால் காவல்துறையை சேர்ந்த அதிகாரி ராஜலட்சுமியின் கோபத்தை சுட்டிக்காட்டி துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்க மறுக்கிறார். இதனால் கோபம் அடைந்த ராஜலட்சுமி நீதிமன்றத்திற்கு  சென்று துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று மனு  தாக்கல் செய்கிறார். அவருக்கு நீதிமன்றத்தில் லைசென்ஸ் கொடுக்க  அனுமதித்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘லைசென்ஸ்’ படத்தின் மீதிக்  கதை..

விஜய் டிவியில் பல பாடல்களை பாடி அசத்திய  “என்ன மச்சான்” புகழ் ராஜலட்சுமி இப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும், பாலியல் தொந்தரவுகளையும் தட்டி கேட்கும் ஒரு கோபக்கார பெண்மணியாக  கதாநாயகி ராஜலட்சுமி மிகவும் அருமையாக நடித்து அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருத்தமான தேர்வாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் அவர் நடிக்கும்போது, கொஞ்சம்  ஓவராக  நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல பாடியதில் புகழ் பெற்றதுபோல் நடிப்பையும் காட்சிகளுக்கு தகுந்தபடி சரியான முறையில் கையாண்டால் நிச்சயம் ஒரு உன்னதமான நல்ல நடிகையாக வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை. நீதிமன்ற காட்சிகளில் தனது சிறப்பான  நடிப்பின் மூலம்  நீதிபதி முன் ஆஜராகும் மந்திரி பழ கருப்பையாவை பார்த்து “உங்கள் கன்னத்தில் நான் அறைந்தால் எப்படி இருக்கும்? ” என்று நீதிபதி முன்னிலையில் கேட்கும் காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார்.

ராஜலட்சுமியின்  தந்தையாக ராதாரவி நிதானம் தவறாமல் நடித்து அனைவரின் மனதையும் கவர்கிறார். எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதன் தன்மையை உணர்ந்து, சர்வசாதாரணமாக கையாண்டு ரசிகர்களை வியக்க வைக்கும் ராதாரவி, இந்த படத்திலும் அந்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார். தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் இந்த திரைப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு மெருகேற்றி அசத்தி இருக்கிறார்.

சிறுவயது பாரதியாக வரும் அபி நட்சத்திரா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். தன்னை சுற்றி வளைக்கும் ரவுடிகளிடம்  ஆக்ஷன் அதிரடி காட்டும் காட்சி மிக சிறப்பாக செய்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். என்.ஜீவானந்தம், நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த  பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப்பின் இசையும் படத்திற்கு பக்க பலமாக இருந்து கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

தற்போது அதிகமாக சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் பலாத்காரங்களை மையமாக கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் கணபதி பாலமுருகன், தனது உன்னதமான திரைக்கதை மூலம் படத்தை ரசிக்க வைப்பதோடு,  பெண் குழந்தைகள் வைத்திருக்கும் மக்களையும் சிந்திக்க  வைக்கிறார். இந்த படத்தில் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர், பாரதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பலருக்கு பாடம் கற்று கொடுத்திருப்பதோடு, எதிர்காலத்தில் போக்சோ சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து  படத்தை பரபரப்பாக நகர்த்தி சென்று இருப்பது பாராட்டதக்கது..

மொத்தத்தில் ‘லைசென்ஸ்’  திரைப்படம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி எடுத்த படம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.