’பெருசு’ திரைப்பட விமர்சனம்!

45

சென்னை:

வைபவ், சுனில், தனலட்சுமி, சாந்தினி, நிஹாரிகா, கஜராஜ், முனிஷ்காந்த், கருணாகரன், ரெடின் கிங்ஸ் லி, பால சரவணன், சுவாமிநாதன், வி டி வி கணேஷ், அலெக்சிஸ், சுபத்ரா, தீபா ம்ற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “பெருசு” இந்தப் படத்தை இளங்கோ ராம் எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஒரத்த நாடு கிராமத்தில் மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ள பெருசு என்கிற அலெக்சிஸ் தனது  மனைவி தனலட்சுமி, மற்றும் இரண்டு மகன்களான வைபவ், சுனில் ரெட்டி மருமகள்கள் சாந்தினி, நிஹாரிகா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் ஒரு நாள் பகல் நேரத்தில் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து டிவி பார்க்கும் நிலையில் அலெக்சிஸ் (பெருசு) திடீரென்று இறந்து விடுகிறார்.  தந்தை இறந்தவுடன் துக்கத்தில் இருந்த அண்ணன் சுனில் ரெட்டி, தம்பி வைபவ், உள்ளிட்ட குடும்பமே வேதனையில் இருக்கும்போது, மேலும் அதிர்ச்சியூட்டும் இன்னொரு விஷயம் என்னவென்றால் இறந்த தந்தையின் ஆண்குறி இயல்பைவிட பெரிதாகி நிற்கிறது. இதனைக் கண்ட வீட்டில் உள்ளவர்கள் துக்கம் விசாரிக்க வரும் அனைவரிடமும் சடலத்தை காட்ட முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

பெருசு என்கிற அலெக்சிஸ் உறவுகளான மனைவி தனம் ,சுனில் ,வைபவ் ,சித்தியான தீபா மருமகள்களான சாந்தினி ,நிஹாரிகா என அவரது உடலை பார்க்கும் அனைவருக்கும் இறந்தவரின் அந்தரங்க பகுதி ஆண்மைத்தனத்துடன் வீரியமாக காட்சியளிப்பதை மறைப்பதற்கு பலவித முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால், இறந்தவர் உடலை மற்றவர்களுக்கு காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை தீர்க்கவும் முடியாது. அதனால் இறந்தவர் குடும்பத்தார்  எப்படி இந்த பிரச்சனையை சமாளித்தார்கள். இறந்து போன தந்தையின்  இறுதிச் சடங்கு நடைபெற்றதா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம்தான் ’பெருசு’.

கதாநாயகனாக நடித்திருக்கும் வைபவ் அனைத்து காட்சிகளிலும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்கிறார். சில காட்சிகளில் செயற்கையாக நடிப்பது படத்திற்கு பலவீனமாக இருந்தாலும், தனது  நகைச்சுவை மூலம் சரி செய்து விடுகிறார்.

பெருசுவின் மூத்த மகன் கதாபாத்திரத்தில், வைபவ் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில் ரெட்டி தன் உணர்வுகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தி உயிர் கொடுத்து இருக்கிறார்.

பெருசாக நடித்த நடிகர்  அலெக்சிஸ் நடிப்பு மிக சிறப்பு. அம்மாவாக நடித்திருக்கும் தனம் ,தீபா ,சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி .வைபவின் மனைவியாக நடித்திருக்கும் நிஹாரிகா, பாலசரவணன், முனீஷ்காந்த் .ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ,கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என அனைவரும் நடிப்பில் அசத்தி இருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் சத்யா திலகம் ஒரே வீட்டில் நடக்கும் கதை என்பதால், தனது வித்தியாசமான ஒளிப்பதிவு மூலம் அனைத்து காட்சிகளையும் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

இசையமைப்பாளர் அருண் ராஜின் இசை பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான். கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை மூலம் நகைச்சுவை உணர்வை ரசிகர்களிடம் மிக நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார்.

வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய இப்படத்தை ஆண்குறி ஆண்மைதன்மையுடன் இருப்பதை எப்படி  அடக்கம் செய்வது என்பதை காமெடி என்ற பார்வையில் சரியான முறையில் திரைக்கதை அமைத்து ரசிகர்கள் அனைவரும் சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம்.ஆனால் சில காட்சிகளில் மட்டுமே வாய்விட்டு சிரிக்க முடிகிறது.

மொத்தத்தில், ‘பெருசு’ படம் காமெடி ரசிகர்கள் பார்க்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.