‘கெவி’ திரைப்பட விமர்சனம்!

201

சென்னை:

அறிமுக நாயகன் ஆதவன், ஷீலா, ஜாக்குலின் லைடா, சார்லஸ் வினோத், விவேக் மோகன், ஜீவா, காயத்ரி, உமர் பரூக், காமன்மேன் கணேஷ், ஜெகத்ராமன், அபிமன்யு மீனா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “கெவி”.  இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தமிழ் தயாளன்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

பல நூற்றாண்டுகளுக்கு முன் மதுரையில் வாழ்ந்துவந்த மக்கள், ஆங்கிலேயர்கர்களின் இம்சையைத் தாங்க முடியாமல் அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து உயரே ஏறி, கொடைக்கானலில் அடிப்படை வசதி இல்லாத வெள்ள கெவி என்கிற ஒரு மலைவாழ் கிராமத்தில் ஒரு அமைதியான நிலப்பரப்பைக் கண்டு, அங்கேயே குடியேறினார்கள். அத்தகைய ‘வெள்ளக்கெவி’ ஊரார், அக்காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில்,  இக்காலத்திலும் சாலை, போக்குவரத்து, மருத்துவமனை, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகிறார்கள். பாரம்பரியமாக அந்த மலை கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் ஆதவன். அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள், மருத்துவ வசதிகளும் இல்லாததால்  இதுதொடர்பாக ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒன்றும் நடக்கவில்லை.

இந்த சமயத்தில், அங்கு தேர்தல்  நடக்கிறது. தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக அந்த மலை வாழ் கிராமத்தில் உள்ள மக்களை சந்திக்க வரும் ஆட்சி நடத்துபவர்களிடம்  சாலையும், மருத்துவமனையும் இல்லை எப்படி உங்களுக்கு ஓட்டு போட முடியும் கேள்வி கேட்கிறார் ஆதவன்..அதனால், அவர்களுடன் வந்த காவல்துறை காவலர்களுடன் மோதல் ஏற்படுகிறது. இதனால்,ஆதவன் மீது கோபமடையும் காவல்துறை அதிகாரி சார்லஸ் வினோத்,  ஆதவனைப் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆதவன் மனைவி ஷீலா நிறைமாத  கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவ வசதி இல்லாததால் அவரை அந்த கிராம மக்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள்.

இதில் அவர் உயிரும் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிரும் ஊசலாடுகிறது.  நிறைமாத கர்ப்பிணி மனைவியைத் தனியாக விட்டு விட்டு, மலையை விட்டுக் கீழே இறங்கும் போது, காவல்துறை அதிகாரி சார்லஸ் வினோத் , மற்றும் காவலர்களும் சேர்ந்து ஆதவனை கொலை செய்ய முயல்கிறார்கள். காவல்துறை காவலர்களிடம் சிக்கி ஆதவன் உயிருக்கு போராட, மறுபக்கம் அவரது கர்ப்பிணி மனைவியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற கிராம மக்கள் போராடுகிறார்கள், இறுதியில் ஆதவன் காவலர்களிடமிருந்து உயிர் தப்பினாரா?  அவரது கர்ப்பிணி மனைவி பிரசவித்து அவரும் குழந்தையும் உயிர் பிழைத்தார்களா? என்பதுதான் “கெவி” படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவன், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும்.  அறிமுக நடிகராக இருந்த போதிலும், நல்ல அனுபவம் மிக்க நடிகர் போல நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். காவல்துறையின் சித்ரவதையிலிருந்துதப்பித்து,  இறுதியில் தன் மனைவியையும், குழந்தையையும் பார்க்கத் துடிப்பது போன்ற காட்சிகளில் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிக சிறப்பாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தி சிறந்த முறையில் தன் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கதாநாயகி ஷீலாவுக்கு இந்தப்படத்தில் அமைந்திருக்கும் கதாபாத்திரமும் அதில் அவருடைய சிறப்பான நடிப்பும் நெஞ்சை பதற வைக்கின்ற அளவுக்கு மிரட்டி இருக்கிறார். இந்த படத்தில் மந்தாரை கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

பயிற்சி மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலின், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத், முதன்மை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, கடுக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் மோகன், தர்மதுரை ஜீவா, போஸ்ட் மேனாக நடித்திருக்கும் உமர் ஃபரூக் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களது நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்கள்.

மலைகிராம  இயற்கை அழகையும் அந்த மக்கள் படும்பாடுகளையும் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா மிக நேர்த்தியாகப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பாலசுப்ரமணியன்.ஜி இசையில்,பாடல்கள் திரைக்கதையின் அங்கமாகவே மாறி மனதை உருக  வைத்திருக்கின்றன. பின்னணி இசை ஒவ்வொரு காட்சிகளுக்கு ஏற்ப பயணித்து இருக்கிறது.

இயக்குநர் தமிழ் தயாளன், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களமும் அதை அனைவரும் ரசிக்கும் விதத்தில் வெளிப்படுத்திய விதமும்  பாராட்டாமல் இருக்க முடியாது. மிகவும் தத்ரூபமாக மலை வாழ் மக்களின் வேதனைகளையும், பிரசவ வலியால் அவஸ்தை படும் பெண்களின் நிலையையும் படம் பிடித்து காட்டி,  அவர்கள் அன்றாட சந்திக்கும் உயிர் பலியையும் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘கெவி’ படம் கண்டிப்பாக விருது வாங்கும் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.