‘டியூட்’ – திரைப்பட விமர்சனம்!

33

சென்னை:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹாரூன், பரிதாபங்கள் திராவிட் செல்வம், நேஹா ஷெட்டி, சத்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “டியூட்” இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் கீர்த்தீஸ்வரன்.

தற்போது திரையங்குகளில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருதவரையில்,

சென்னையில் பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கக்கூடிய ஜாலியான நிகழ்ச்சிகளை நடத்தும் ‘ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த நேரத்தில் பிரதீப்பும், ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் காரணமே சொல்லாமல் பிரதீப்பிடமிருந்து விலகிச் செல்கிறார். இந்த சோகத்தில் இருக்கும் பிரதீப்பை ஆறுதல்படுத்தி தேற்றுவதோடு, அவர் மீதான தனது காதலையும் வெளிப்படுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார் மமீதா. சிறுவயதிலிருந்தே ஒன்றாக பழகியதால் நட்புதான் இருக்கிறது காதல் இல்லை என்று பிரதீப், மமீதாவின்  காதலை ஏற்க மறுக்கிறார்.  தனது காதல் தோற்றுப் போன நிலைமையில் மமீதா மேல் படிப்பு படிப்பதற்காக பெங்களூர் செல்கிறார்.

இதன் பிறகு தன்னுடைய வழியில் குறுக்கே வரும் எத்தனையோ பெண்களை பார்த்தும் பிரதீப்புக்கு காதல் உணர்வு வரவில்லை. சில கால இடைவெளியில் பிரதீப்புக்கு,  மமீதா மீது காதல் வருகிறது. உடனேயே பிரதீப் இதை தாய் மாமன் சரத்குமாரிடம் சொல்ல… சரத்குமார் அவசரமாக இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் பிரதீப்பின் காதலை மமீதா ஏற்க மறுத்து வேறு ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். இந்த சூழலில் காதல். சாதிவெறி பிடித்த என் அப்பா எங்களை சேர்த்து வைக்க மாட்டார். எங்கள் இருவரையும் கொன்று விடுவார் என்று சொன்னவுடன், அதிர்ந்து போன பிரதீப் இந்தப் பிரச்சனையில் இருந்து மமீதாவை காப்பாற்றுவதாக அவரிடம் வாக்களிக்கிறார். இறுதியில் மமீதாவை அவரது காதலனுடன் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதுதான் “டியூட்’ படத்தின் மீதிக் கதை.

முதல் இரண்டு படங்களைப் போலவே இந்தப் படத்திலும் கதாநாயகன் அகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். வழக்கமான கதாபாத்திரம் போல் இல்லாமல், அவருக்காகவே வித்தியாசமாக செதுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு நடித்திருப்பது படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒவ்வொருவிதமான முக பாவனைகளையும், உடல் மொழியையும் வெளிப்படுத்தி அதில் ஒரு சின்ன காமெடியை கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகி குறளரசியாக மமீதா பைஜு நடித்திருக்கிறார். தன்னிடம் உள்ள அழகு, இளமை, துள்ளல் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பு என எல்லாவற்றிலும் கவர்கிறார்.  கதைக்கு ஈடு கொடுக்கும் வகையில் நிறைவாக நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

.அமைச்சர் அதியமானாக நடித்திருக்கும் சரத்குமார், ஜாதி வெறி பிடித்த  தந்தையாக மகள் மீது பாசம் காட்டுவது, திடீரென்று அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயல்வது என மாறுபட்ட நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

ரோகிணி, ஹிருது ஹாரூன், பரிதாபங்கள் திராவிட் செல்வம், நேஹா ஷெட்டி, சத்யா போன்றவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்து பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கரின் இசையில் ஆட்டம் போடும் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அவரது பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளிலும் இளமைத்துள்ளல்தான். இந்த படத்தின் கதைக்கு தகுந்தவாறு ஒளிப்பதிவு செய்து இருப்பதை பாராட்டலாம்.

இளம் தலைமுறையினரின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்தவராக கதை எழுதி இயக்கியிருக்கும் கீர்த்திஸ்வரன் சூப்பராக திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாகவும், ரசிகர்கள் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாகவும் காட்சிகளை கொண்டு சென்றிருப்பதை கண்டிப்பாக பாராட்டலாம்.

மொத்ததில் ‘டியூட்’ படம் இளைஞர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.