சென்னை:
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்.பி. சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேடேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “டீசல்”
தற்போது வெளி வந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சென்னை துறைமுகத்தில் இருந்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல கிலோமீட்டர் நீளமுள்ள கச்சா எண்ணெய் குழாய் மூலம் வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வதற்கு பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டதால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அந்த குழாய்கள் அனைத்துமே செல்கின்ற பாதையில் பல மீனவர் குடியிருப்புகள் இருந்தன. இந்தத் திட்டத்திற்காகவே அந்தப் பகுதியில் இருந்த பல மீனவ கிராமங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன. அந்த திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராடியும் பலன் இல்லாததால் அந்த கிராமத்தை விட்டே வெளியேறும் மீனவர்களில் சிலர், அதே கச்சா எண்ணெயை திருடுவதை தொழிலாக செய்கிறார்கள். அந்த எண்ணெய் திருட்டு தொழிலை சாய்குமார் தலைமையில், ராயபுரம் கடற்கரையில் ஒரு எண்ணெய் கடத்தல் அமைப்பு அமைத்து, தனது அடியாட்களுடன் எண்ணற்ற உயிர்களை அழித்த அதே குழாயின் நடுவே துளையிட்டு கச்சா எண்ணெய்யைத் திருடி தொழிலதிபர் சச்சின் கேடேகரிடம் விற்கிறார்.
அதில் வரும் லட்சக்கணக்கான பணத்தை அந்த கிராம மக்களுக்கு நல்லது செய்து தனக்கே உரித்தான பாதையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார் சாய்குமார். அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் மாஃபியாவை வளர்த்துவிடும் சில பெரும் முதலாளிகளின் சதிதிட்டத்தால், வட சென்னை முழுவதும் உள்ள மீனவ கிராமங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இந்த சூழலில் மீனவர்கள் போராட்டத்தில் உயிரை இழந்த தனது நண்பனின் மகன் ஹரிஷ் கல்யாணை சிறு வயதிலிருந்தே வளர்ப்பு மகனாகவும் வளர்க்கிறார் சாய்குமார். அவரும் தனது வளர்ப்பு தந்தை தொடங்கிய டீசல் மாஃபியா கடத்தல் அமைப்பில் ஈடுபட்டு கெமிக்கல் என்ஜீனியரிங் படித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், இந்தத் கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடுபடுகிறார்.
பெரிய தொழிலதிபரான சச்சின் கேடெகர் சென்னையில் இருந்து சாய்குமார் அனுப்பும் குரூட் ஆயிலை வாங்கி அதை சுத்திகரித்து பெட்ரோல் டீசல் ஆக மாற்றி விற்பனை செய்து பெரும் கோடீஸ்வரராக இருக்கிறார். சென்னையிலிருந்து மும்பைக்கு கச்சா எண்ணெயை லாரிகளில் ஏற்றிச் செல்வதில் அதிக செலவு ஆவதால் சென்னையிலேயே இந்த கச்சா எண்ணெய் கடத்தல் தொழிலை செய்யலாம் என்று நினைக்கும் சச்சின் கேடெகர், நமக்கென்று ஒரு தனி துறைமுகம் இருந்தால் தாராளமாக செய்து, இதைவிட அதிகமாகவே பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் திட்டுகிறார். அவரது திட்டத்திற்கு சாய்குமார் ஒப்புக் கொள்ளாததால், அவரை அரசியல் தலைவர்களின் சொல்லுக்கு இணங்க காவல்துறையினர் சிறையில் அடைக்கின்றனர். தனது வளர்ப்பு தந்தை சிறையில் இருப்பதை அறிந்துக் கொள்ளும் ஹரிஷ் கல்யாண், சச்சின் கேடெகரின் சதிதிட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த முயற்சியில் ஹரிஷ் கல்யாண் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் “டீசல்” படத்தின் மீதிக் கதை.
மீனவராக ஹரிஷ் கல்யாண் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவரது உடல் மொழி, ஆக்ஷன் வேகம் எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். காதல் நாயகனாக அறியப்பட்ட அவர் இந்தப்படத்தில் சண்டைக் காட்சிகளிலும் அற்புதமாக நடித்து மிரட்டியிருக்கிறார். பல காட்சிகளில் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார்,
நாயகி அதுல்யா ரவிக்கு இப்படத்தில் அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் படம் முழுவதும் வருவதோடு கதையிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். அதற்கேற்ப நடித்து ரசிகர்களிடம் வரவேற்புப் பெறுகிறார்.
கேபிஒய் தீனா நாயகனின் நண்பராக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
போலீஸ் துணை கமிஷனர் மாயவேலாக நடித்த வினய், நாயகனின் வளர்ப்பு தந்தையாக நடித்திருக்கும் சாய்குமார் மற்றும் போஸ் வெங்கட், மாறன், அனன்யா, ரமேஷ் திலக், கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், , தங்கதுரை, ஷாகீர் உசேன் மற்றும் இப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் “எம்மாடி எம்மாடி” பாடல் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை.
ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. கடல் பகுதிகளில் படகுகளில் நடக்கும் காட்சிகளையெல்லாம் ரசிக்கும்படி படமாக்கி இருக்கிறார்.
ஒரு காலத்தில் வட சென்னையில் உள்ள ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை போன்ற பகுதிகளில் சென்னை துறைமுகத்தில் இருந்து மணலிக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெய் போகும்போது அதை திருட்டு தனமாக சில ரவுடிகள் எடுப்பதும், மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை பற்றியும் மிக அழுத்தமான ஒரு கதையை உருவாக்கி, ஆயில் திருட்டு மக்கள் வாழ்க்கையை எப்படி நேரடியாக பாதிக்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குனர் சண்முகம் முத்துசாமி மக்கள் ரசிக்கும் விதத்தில் இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘டீசல்’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN>