CHENNAI;
ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது . இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் கார்த்திக் நேதா பேசுகையில், ” அஃகேனம் என்ற தமிழ் தலைப்பிற்காக மிக்க மகிழ்ச்சி. இதற்கான காரணத்தை இயக்குநர் விவரிப்பார். இயக்குநர் உதய் என் வீட்டிற்கு வந்து பாடல்களுக்கான சூழல்களை விவரித்தார். இந்த திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வை பேசக்கூடியது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை -ராக் இசை – இந்திய நாட்டார் இசை – இந்திய செவ்வியல் இசை – என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி. இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினை பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
அருண் பாண்டியன் ஐயாவை முதன்முறையாக சந்திக்கும்போது சற்று பதட்டத்துடன் தான் இருந்தேன். அவருடன் தொடர்ந்து பழகும் போது தான் அவர்’ பலாப்பழம் ‘என தெரிந்து கொண்டேன். பழகிய பிறகு இனிக்க இனிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் நிறைய பேர் புது முகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இது அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு. இன்றைக்குள்ள காலகட்டத்தில் வியாபாரத்திற்கு யார் பயன்படுவார்களோ அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிதாக ஒரு குழுவினரை அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும். அறிமுக இசையமைப்பாளர் பரத் வீரராகவனிடமிருந்து இப்படி ஒரு ஓசையை நான் எதிர்பார்க்கவில்லை. சாலச் சிறந்த பணியை செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அறிமுக இயக்குநர் உதய்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சக பயணியாக ..சக கலைஞனாக.. இணைந்து பயணிப்போம். நேர்மையுடனும், அறத்துடனும் பயணம் செய்யுங்கள் ” என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில்,
இயக்குநர் உதய்- நேர்த்தியாக கதை சொல்வதில் கெட்டிக்காரர். இவரும், இசையமைப்பாளரும் எதிரிகளை வலிக்காமல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள். பாடல் வரிகளை பெறுவதில் சில திருத்தங்களை நாசுக்காக சுட்டிக் காட்டுவார்கள். பரத் நன்றாக வர வேண்டும் என உதய் பாடுபடுகிறார். இவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த அருண் பாண்டியனுக்கு பெரிய மனசு. நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு துணிவு வேண்டும். பேரன்பு இருக்க வேண்டும்.
அவரை சந்தித்தபோது உங்களின் படத்தில் நான் பங்கு பெற வேண்டும் . இது மட்டும் தான் என்னுடைய விருப்பம் என்றேன். ஏனெனில் அவரை நான் அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறேன். ‘இணைந்த கைகள் ‘ படத்தை இப்போதும் பார்ப்பேன். எப்போதும் பார்ப்பேன். ‘மூங்கில் கோட்டை’ என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்காக சின்ன வயதில் ஏங்கிருக்கிறேன். ‘ஊமை விழிகள்’ படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும் , திரில்லும் அதில் இருக்கிறது. அதிலும் படம் வெளியான பிறகு சத்யம் தியேட்டரில் கூட்டம் கூடி இருந்ததை நீங்கள் மகிழ்ச்சியுடன் சொன்னபோது உங்களின் சந்தோஷத்தை கண்களால் ரசித்து உணர்ந்தேன்.
இந்தப் படத்தில் கீர்த்தி நடித்திருந்த காட்சிகளை பார்த்து தான் ‘வாழ்க்கை போராட்டமே ‘எனும் பாடலை எழுதினேன். அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இங்குதான் அவர்கள் அப்பா – பொண்ணு என்று இருக்கிறார்கள். இந்த படத்தில் வேறு இரு கதை மாந்தர்களாக இருப்பார்கள் . கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். சின்ன படங்கள் வெற்றி பெறும்போது பெரிய படங்களாகிறது. இதற்கு ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் பரத் வீரராகவன் பேசுகையில்,
இயக்குநர் உதய் .கே நண்பர் மட்டுமல்ல மிகுந்த திறமைசாலி. இந்த படத்தின் பின்னணி இசைக்காக காட்சிகளை பார்த்த போது.. அதில் இந்திராவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரமாதம். அருண் பாண்டியனை இந்த படத்தில் பார்ப்பது போல் வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். நன்றாக ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து நடனமாடி இருக்கிறார். நாங்கள் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்து படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. பாடல்களையும், படத்தையும் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து விட்டு ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் உதய்.கே பேசுகையில்,
நான் குறும்படத்தை இயக்கி விட்டு நேரடியாக படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய குடும்பத்தார்களை விட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம். அவரும் நாங்களும் இணைந்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக தரமான படமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்த கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது. நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் அந்த இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ… அந்த இந்திராவாகத்தான் இந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அருண் பாண்டியனின் வழிகாட்டலால்தான் இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டிற்குள் தரமாக உருவாக்க முடிந்தது.
இசையமைப்பாளர் பரத் – ஒளிப்பதிவாளர் விக்கி- எடிட்டர் தேவத்யன்- இவர்கள் அனைவரும் என்னுடன் நண்பர்களாக பயணித்தவர்கள். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களின் பணி- படம் வெளியான பிறகு பேசப்படும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் ரசிகன். அவர் என் படத்தில் பணி புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவரை ரசிப்பேன். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போது அவர் எனக்காக ‘மெல்லாலியே மெல்லாலியே’ என்று புதிய வார்த்தையை வழங்கினார். அந்தப் பாடல் அழகானது மற்றும் ஆழமானது அவருக்கும் நன்றி.
அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் இந்த டைட்டில் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தார். ஒரு சமயத்தில் இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்.. நாம் தெரியப்படுத்துவோம் என எங்களுக்கு ஊக்கமளித்தார். இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு இந்த படம் ஏற்றதாக இருக்கும். ஒரு புது குழுவாக எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து ஒரு படத்தை வழங்குகிறோம். ஜூலை நான்காம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில்,
ஒரு நடிகராக…. இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.
அப்பா ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்: ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன். நான் இந்த படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து – போர்- இழப்பு – என ஏராளமான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.
இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும். இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில்.. எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம்.
இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான். இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால்.. நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்.” என்றார்.
நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில்,
அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா ?அவர்களின் திறமை என்ன? எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வர சொன்னால் அவர்கள் தங்களின் திறமையை காண்பிப்பார்கள் என்றார் அந்த தருணத்தில் இசையமைப்பாளர் -ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் -என அனைவரும் வந்திருந்தனர். அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் என தீர்மானித்தேன். முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ” என்றார்.